விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
விருதுநகரில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு போன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது. மதுரை சரகம் காவல் துறை துணை தலைவர் காமினி தேர்வினை பார்வையிட்டார்.
இந்த தேர்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் செய்திருந்தார். இந்நிலையில், இத்தேர்வில் கலந்துகொள்ள விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து (21) என்ற இளைஞர் வந்திருந்தார்.
இவர் 1,500 மீட்டர் தகுதி ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடும்போது மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாரிமுத்தை பரிசோதித்து பார்த்தே போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் உடல் தகுதி தேர்வில் கலந்துகொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 5 மாதங்களில் 209 காவலர்கள் உயிரிழப்பு: காரணம் என்ன?