விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததாலும் படைப்புழு தாக்குதலாலும் பெரும்பாலான சோளப் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதன் காரணமாக விவசாயித்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் சோளப் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் அளவில் சோளப் பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆனால் போதிய மழை இல்லாததால் இந்த பயிர்கள் முளைத்து விளைவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பெய்துவரும் மழை காரணமாக பயிர்கள் தழைத்து ஓங்க ஆரம்பித்தது. ஆனால், படைப்புழு தாக்கத்தினால் விளைந்து வரும் பயிர்கள் நாசமாக தொடங்கியுள்ளன.
இதனால் ஏக்கருக்கு ரூபாய் முப்பதாயிரம் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்ட சோளப் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மனு அளித்தனர். அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.