விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷகித்யாதரிணி. இவர் உலக சாதனையோடு புத்தாண்டை துவக்க திட்டமிட்டு அதற்காக கடந்த 3 மாதங்களாக ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு அடி உயர நாற்காலி முதல் படிப்படியாக நன்கு அடி நாற்காலி வரை வரிசையாக வைத்து, நாற்காலியின் மேல் ஏறி ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஒரு காலை வைத்து முன்னும் பின்னுமாகவும், பாக்ஸர் ஸ்டெப், கிராஷர் உள்ளிட்ட 50 வகையான ஸ்கிப்பிங்கை 2020 முறை செய்து புதிய உலக சாதனைபடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மேலும், உலகிலேயே முதன்முறையாக 15 நிமிடம் 48 வினாடிகளில் 50 வகையான ஸ்கிப்பிங்கை செய்து யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்திலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும் இச்சாதனைப் படைக்கும் நிகழ்ச்சியில் யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாபு பாலகிருஷ்ணன், பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தலைவர் உமா ஆகியோர், மாணவி ஷகித்யாதரிணியின் சாதனையைப் பாராட்டி, அவருக்கு ஸ்கிப்பிங் உலக சாதனைக்கான சான்றிதழையும் வழங்கி கவுரவித்தனர்.
இச்சாதனைக்கு பிறகு பேசிய மாணவி, அழிந்துவரும் நிலையில் உள்ள இக்கலையின் மீது எனக்கு சிறுவயது முதலே ஆர்வமிருந்தது. அதனால் இக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக இச்சாதனையை புரிந்தேன். மேலும் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, உடல் ஆரோக்கியமடையவும் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை படைத்த மாணவி ஷகித்யாதரிணிக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க: தேர்வுக்குழு போட்டியில் களமிறங்கிய அகர்கர் - ரசிகர்கள் மகிழ்ச்சி!