விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் ஏவியேசன் அத்தார்டி ஆஃப் நியூசிலாந்து நிறுவனத்தின் சார்பில் ஏவியேஷன் எனப்படும் விமான படிப்புகள் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கிராமப்புற மாணவர்கள் அதிகம் வசிக்கும் இம்மாவட்டத்தில் இக்கல்வி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், கேபின் க்ரூவி சான்றிதழ் படிப்பு, விமான நிலைய ஊழியர்களுக்கான சான்றிதழ் படிப்பு உரிமம் பெற்ற விமான பராமரிப்பு பொறியாளர் மற்றும் விமான செயல்பாட்டு நிர்வாகத்தில் சான்றிதழ் படிப்பு உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவில் ஏவியேசன் அத்தார்டி ஆஃப் நியூசிலாந்து நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமை நிர்வாக அலுவலர் அகமத் சுபேர் பங்கேற்றார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் விமான சந்தைகளுள் ஒன்று. மத்திய அரசின் உதான் (UDAN) திட்டமானது சிவில் விமான கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும் விமான பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 16.3 விழுக்காடு வளர்ந்துவருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், விமானத் துறை அடுத்த நான்கு ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி முதலீட்டை காணும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2026ஆம் ஆண்டில் விமான வழிசெலுத்தல் சேவைகளுடன் விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 1.83 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் விமானத் துறை சார்ந்த படிப்புகளை படித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நிலை உருவாகும் என்றார்.