புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புலிகளின் இனம் அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் சைபீரியன் புலிகள், வங்க புலிகள், தென் சீன புலிகள், ஜாவா புலிகள், சுமத்திரா புலிகள், மலாயன் புலிகள், இந்தோனேசிய புலிகள், பாலி புலிகள், காஸ்பியன் புலிகள் என 9 வகை புலிகள் உள்ளன.
உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் 70 விழுக்காடு புலிகள் உள்ளன. 50 விழுக்காடு புலிகள் சரணாலயம் உள்ளது. அழிந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்திய நாட்டின் தேசிய விலங்கான புலி 2000ஆம் ஆண்டில் ஆயிரத்து 700ஆக இருந்தது.
இந்தியாவின் தேசிய விலங்காக போற்றப்படும் புலியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து பல வன பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2ஆயிரத்து 967 ஆக உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கையை பெருக்கவும், பாதுகாக்கவும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.
கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 76ஆக இருந்தது. தற்போது புலிகளின் எண்ணிக்கை 354ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வன விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்பொறியாளர் மோகன் குமார் (70). தனது மனைவி இறந்த பிறகு தனிமையையும், முதுமையையும் வெற்றி கொள்ளும்படி காடுகளுக்கு சென்று விலங்குகள், பறவைகளை புகைப்படம் எடுப்பதை பொழுதுப்போக்காக கொண்டுள்ளார்.
இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக புலிகளை புகைப்படம் எடுப்பதில் அலாதி பிரியம் கொண்டுள்ளார். ஆப்பிரிக்காவின் காடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் காடுகளுக்கு சென்று வந்துள்ள இவர் 10 ஆண்டுகளாக விலங்குகள் புகைப்பட ஆர்வலராக இருந்து வருகிறார்.
இதுகுறித்து மோகன் குமார் கூறும்போது, "உலக அளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் 70 விழுக்காடு புலிகள் உள்ளன. பல்வேறு வனங்கள் அழிந்துவரும் சூழ்நிலையில் வனத்தை காப்பது மட்டுமின்றி வன விலங்குகளை காப்பதற்கு அனைவரும் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இந்தியாவில் தற்போது வரை 2,967 புலிகள் இருப்பதாக நேற்று(ஜூலை 28) மத்திய அரசு வெளிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. புலிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதி பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு வெளியே வாழ்கின்றன. உயர்ந்து வரும் புலிகளின் எண்ணிக்கையினால், நாட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில், 17 இடங்கள் அதன் உட்சபட்ச ஏற்பளவை நெருங்கத் தொடங்கி விட்டது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
புலிகள் இருக்கும் காடு பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளம். பல்லுயிர் பெருக்கம் மிகுந்து இருப்பது தான் சிறப்பான காடுகளின் அடிப்படையாகும். மேலும் பரந்து விரிந்தக் காடுகள், காலநிலை மாற்றங்கள் சீராக இருக்க உதவுகின்றன.
எனவே தான், இயற்கையைப் பாதுகாப்பதில் புலிகளை முன்னிலைப்படுத்தி உலகமே செயல்படுகின்றது. சர்வதேச புலிகள் தினத்தில், நாம் அனைவருமே, புலிகளின் கடந்த கால, நிகழ்கால வாழ்க்கையை அறிந்து, அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: உலக புலிகள் தினம்: காடுகளின் வனக்காவலனை பாதுகாப்போம்