விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பிச்சையம்மாள்(45). இவர்களுக்கு சுரேஷ்(28), என்ற மகனும் பிரியா(23) என்ற மகளும் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் காணாமல் போனதையடுத்து, அவரது சகோதரர்கள் தொடர்ந்து, பிச்சையம்மாளிடம் விவரம் கேட்டு வந்த நிலையில் அவர், தனது கணவர் பணி நிமித்தமாக கேரளாவுக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
வெளியூர் சென்ற சுப்புராஜ் மாதக்கணக்கில் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்கள் சந்தேகமடைந்தனர். இந்நிலையில், சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி மூடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதி நேற்று சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சுப்புராஜின் சகோதரர் கணேசன் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சாத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சுபக்குமார் தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த ஒரு இடத்தை தோண்டிப்பார்க்க முடிவு செய்து சுப்புராஜின் சகோதரர் கணேசன் காவல் துறையினரின் முன்னிலையில் அங்கு தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பிச்சையம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவம் நடந்த அன்று இரவு பிச்சையம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்தபோது சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பிச்சையம்மாளுக்கும், சுப்புராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
அதில், எதிர்பாராதவிதமாக சுப்புராஜை தள்ளிவிட்டபோது அவர் தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அதிர்ச்சியில் செய்வதறியாது அவரது உடலை வீட்டின் அருகே இரவோடு இரவாக குழிதோண்டி புதைத்ததாக மூவரும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சுப்புராஜின் உடலை குழிக்குள் போட்டு எரித்து இருக்கலாம் என்று கருதுவதாகவும் உடற்கூறாய்விற்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திட்டம் தீட்டி கொலை செய்த கும்பல்; இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!