கரோனா ஊரடங்கு காரணமாக சென்ற நான்கு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கைத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான சூழ்நிலையில், மகளிர் சுய தொழில் செய்ய பயிற்சி அளித்து வருகிறார் சாத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் உமயலிங்கம்.
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்று நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை கூறியது போல, வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோருக்கு சுய தொழில் பயிற்சி அளித்து தன்னம்பிக்யை ஏற்படுத்தி வருகிறார் உமயலிங்கம்.
இது குறித்து உமயலிங்கம் கூறும்போது, "விருதுநகரில் கரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், கைம்பெண்கள் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் தொழில் திறன் பயிற்சி அளித்து வருகிறோம். அவர்களுக்கு தொழில் கடன் பெறவும் வழிமுறைகளை செய்து வருகிறோம்" என்றார்.
அங்கு பயிற்சி பெற்று வரும் கல்லூரி மாணவி பேசுகையில், "கரோனா ஊரடங்கு விடுமுறையில் தொழில் திறன் பயிற்சி பெற்றுள்ளேன். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் என்னுடைய மேற்படிப்பை தொடரப் போகிறேன். அரசு வேலை வாய்ப்பை நம்பி இருக்காமல் எதிர்காலத்தில் தொழில் முனைவோராக மாற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை அத்தியாவசியங்களான உணவு, உடை, உறைவிடம் போல எதிர்வரும் காலத்தில் கைத்தொழில் என்பது முக்கியமாக மாறும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
இதையும் படிங்க: மாடி வீட்டை பறவைகளின் சரணாலயமாக மாற்றிய பெண்: பறவைகள் கூட்டம் பார்க்கவே அழகு...!