விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோச்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வருகை தந்து வழக்கமாக சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் புரட்டாசி மாதம் வாரத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (செப்.19) அதிகாலை ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு காலை மூன்று மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு காலசாந்தி என்னும் சிறப்பு பூஜை நடத்தபட்டது.
வழக்கமாக, ஆந்திர மாநிலம், திருப்பதி கோயிலுக்குச் செல்ல முடியாத, அங்கு காணிக்கைகளை செலுத்த முடியாத பக்தர்கள், இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து ஆடு, மாடுகள், விவசாயப் பொருள்கள், தானியப் பொருள்கள் போன்றவற்றை காணிக்கையாக வழங்குவார்கள். இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
கரோனா அச்சம் காரணமாக இந்த வருடம் ஶ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்குள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 10 வயதிற்குக் கீழ் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.
உடல் வெப்பப் பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலுக்கு ஆட்டோக்களில் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டும் 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். எதிர்பாராத விபத்துக்களைத் தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.