விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் செண்பகதோப்பு ரோடு, இந்திரா நகர் பச்சை காலனி பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மதுவிலக்கு காவல் ஆணையாளர் ஸ்டீபன், காவல் ஆய்வாளர் பானுமதி தலைமையிலான காவல் துறையினர் பச்சை காலனி பகுதிக்குச் சென்று தீவிரமாக சோதனை நடத்தினர்.
அப்போது அய்யனார் என்பவர் மீதும் அவரது மனைவி ராமலட்சுமி மீதும் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களின் வீட்டினை சோதனை செய்தபோது கஞ்சா கிடைக்கவில்லை.
ஆனால் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கிருந்த 150 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். பின் சாராயம் காய்ச்சப் பயன்படுத்தியப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்து, பின்னர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், மதுப் பிரியர்களுக்காக கள்ளச்சாராய ஊறல் போட்டு அமோக விற்பனையில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என நினைத்த கணவன் மனைவியினை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'என்னோட பையன எப்படி நீ அடிக்கலாம்' சாலையில் சண்டையிட்ட காவலர்கள்!