விருதுநகர் : ஒன்றிய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021-22ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் ஒன்றிய அரசின் தேசிய கல்வி தொகை இணையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் திட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.