விருதுநகர் மாவட்டத்தில், கரோனாவின் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் முன்னதாக தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 57 இடங்களில் மறுஉத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து 166 பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 7 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளதால் கரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட 177 பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது. அத்தியாவசியக் கடைகள் தவிர, மற்ற வணிகக் கடைகள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.