விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள ராமுதேவன்பட்டியில் உள்ள மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கினைப்பாளார் சீமான் அஞ்சலி இன்று செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நடைபெற உள்ள வேலூா் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்ட தீபலட்சுமியே இம்முறையையும் போட்டியிடுவார். பிரிட்டிஷ் ஆட்சியை விட இந்த பாஜக ஆட்சி கொடுமையாக உள்ளது. இந்தியா விடுதலை பெற்ற இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட பல தேசிய இனங்கள் இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறது. அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழியை நீக்கியதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நுழைவு தேர்வுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தரமான கல்விக்கு ஏன் கொடுக்க வில்லை என்று சூா்யா பேசியதை வரவேற்கிறேன். திரைத்துறையைச் சார்ந்த பெரிய நடிகர்கள் மவுனமாக இருக்கையில், சூா்யா மட்டும் பேசியது வரவேற்கத்தக்கது. இந்தியா என்பது ஒரே நாடு என்பதைத் தான் ஏற்கவில்லை. இந்தியா பல நாடுகளின் ஒன்றியம்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அடிப்படை கொள்கையே ஆபத்தானது. பெயரளவில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசு தன்னுடைய கையிலேயே வைத்துக் கொள்வதற்கு எதற்கு மாநில முதலமைச்சர்கள் என்று கேள்வியும் எழுப்பினார்.