திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சிவஞானத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நடக்கப்போகும் மக்களவைத் தேர்தல் காந்தியின் கொள்கைக்கும், கோட்சேவின் கொள்கைக்கும் இடையிலான தேர்தல் போர் ஆகும். மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் மீது எண்ணற்ற தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தியாவில் முக்கிய 5 பணக்காரர்களைப் பாதுகாக்கக்கூடிய அரசாகவே மோடி அரசு இருந்து வந்துள்ளது. நாங்கள் மோடியின் குற்றத்தை மட்டும் கூறி மக்களிடம் ஓட்டு கேட்கவில்லை. நாங்கள் மக்கள் நலத் திட்டங்கள் பல வைத்துள்ளோம். அவற்றைக் கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்க உள்ளோம். குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கும் திட்டம் மற்றும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பட்டாசு பிரசனை, கைத்தறி பிரச்னை போன்றவர்களை சரிசெய்ய பல திட்டங்களை கொண்டு வருவோம்", என்றார்.