விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 620 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில், 4 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு உடல் எடைகளின் அடிப்படையில் 90 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றை கம்பு வீச்சு, கம்பு சண்டை, இரட்டை கம்பு வீச்சு, வாள் வீச்சு, வேல் கம்பு, சுருள் வீச்சு உள்ளிட்ட திறன்களின் கீழ் போட்டிகள் நடந்தது.
இந்தப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த லீ மார்ட்டியல் அகாடமி அணி முதல் இடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை விருதுநகர் தமிழன் சிலம்பாட்ட கழக அணியும், தேனியைச் சேர்ந்த வாழும் கலைக்கூட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.