தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இதில் ஆடி அமாவாசையானது மிகவும் பிரசித்திபெற்றதாகும். ஒவ்வொரு ஆடி அமாவாசைக்கும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வழக்கம். இதில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்த சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், வரும் 31ஆம் தேதி ஆடி அமாவாசை என்பதால், கோயிலுக்கு செல்ல ஆறு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவுப்பொருட்கள், டீ விற்பதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைகளில் சிலிண்டர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளால் 40 கடைகள் செயல்பட்டுவந்த நிலையில், கடைகளை யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் வெறும் ஐந்து கடைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.
இதனால் இதனை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரச்னை ஏதும் ஏற்படாத வண்ணம் உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை-விடுத்துள்ளனர்.