விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் கடந்த வாரம் வடமாநில இளைஞர் ஒருவர் கொலுசுக்கு பாலிஷ் போடுவதாகக் கூறினார். இதை நம்பிய அந்த பெண், தனது கொலுசை கொடுத்துள்ளார். பின்னர், பாலிஷ் போட்டு முடித்த பின், தங்களுடைய தங்கச் செயினில் அழுக்கு இருக்கிறது, அதையும் கழற்றிக் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து செயினை கழற்றிக் கொடுத்த ராஜேஸ்வரி, கொலுசை வீட்டில் வைக்க உள்ளே சென்றபோது, அந்த இளைஞர் தங்கச் செயினுடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, அந்த இளைஞர் ராஜபாளையம் குமரன் தெருவில் சுற்றித் திரிந்ததை பார்த்த ராஜேஸ்வரி, அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.
அதன்பின், அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி, வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மண்ணுகுமார் என்பது தெரியவந்தது.