விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவரைக் கடந்த மூன்று மாதங்களாகக் காணவில்லை. இதனால், சுப்புராஜ் வீட்டிற்குச் சென்று அவரது சகோதரர்கள் விசாரித்தனர். அப்போது அவரது மனைவி பிச்சையம்மாள்(45), மகன் சுரேஷ் (29), மகள் பிரியா (25) மூவரும் சுப்புராஜ் வெளியூருக்கு வேலைக்குச் சென்று விட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், சந்தேகத்தின் பேரில் சுப்புராஜின் சகோதரர்கள் சாத்தூர் வட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சாத்தூர் வட்ட காவல் நிலைய ஆய்வாளர் சுபக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் வீட்டின் பின்புறம் கழிவறை அருகே தலைமுடி, எலும்புகள் உள்ளதாக சுப்புராஜின் உறவினர்கள் காவல் துறையினருக்குத் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அப்பகுதியைத் தோண்டும் போது சில எலும்புகள் கிடைத்துள்ளன.
பின்பு காவல்துறை சுப்புராஜ் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், சுப்புராஜை தாங்கள் தான் கொலை செய்து புதைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். தாய் பிச்சையம்மாளுக்கும் மகன் சுரேஷுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதனைக் கண்டுபிடித்து சுப்புராஜ் அவர்களைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயும், மகனும் இரவு சுப்புராஜ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தபோது, உருட்டுக் கட்டையால் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் சுப்புராஜின் உடலை எரித்து வீட்டின் பின்புறம் உள்ள, கழிவறைத் தொட்டியில் மூன்று மாதத்துக்கு முன்னா் புதைத்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிச்சையம்மாள், சுரேஷ், பிரியா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின், சுரேஷைக் கொலை நடந்த வீட்டுக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்று, புதைக்கப்பட்ட சுப்புராஜின் உடலை, சாத்தூர் வட்டாட்சியர் செந்திவேல் தலைமையில் தோண்டி எடுத்தனர்.
அப்போது அங்கு கூடிய உறவினர்கள், பொதுமக்கள் சுரேஷைத் தாக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து குழந்தை உயிரிழப்பு: ஆந்திராவில் சோகம்