திருச்சுழி அருகே வீரசோழனை அடுத்த ஒட்டங்குளத்தில் அய்யனார் கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொள்ள மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 250க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் சென்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது, அங்கு ஆய்வு பணி மேற்கொண்ட அருப்புக்கோட்டை கோட்டாட்சியர செல்லப்பா ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், மேடை அமைப்பு முறை சரியில்லாததாலும், மைதானத்தில் போதிய அளவு நார் பரப்பாமல் இருந்ததால் அதிகளவு தூசு பரவியதாலும் மாடு மற்றும் மாட்டின் உரிமையாளர்கள், வீரர்கள் உட்பட பார்வையாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்யது தரப்படாததால் போட்டியை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.