உலகின் முதல் இரண்டு உலகப்போர்கள் ஆயுதத்தால் நடைபெற்றது என்றால், மூன்றாவது உலகப்போர் தண்ணீரால் நடைபெறும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு லிட்டர் பெப்சி தயாரிப்பதற்கு ஏழு லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகின்றன. குளிர்பானங்கள் என்பது மக்களின் தாகத்தை தணிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது வருகிற குளிர்பானங்கள் மக்களின் தாகத்தை தணிக்காமல் நாவின் ருசிக்காக தயாரிக்கப்பட்டுவருகிறது.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்த சோடாக்கள் பன்னாட்டு குளிர்பானங்களின் வருகையால் தற்போது நலிவடைந்துவருகிறது. சோடா தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு பெரிய வருமானம் இல்லை என்றாலும் தங்கள் பிழைப்பை ஓட்டுவதற்கும், சோடா தொழிலை பாதுகாப்பதற்காகவும் தொழிலை நடத்தி வருகின்றனர்.
சோடா இருந்த இடத்தில் எல்லாம் பல வண்ணங்களில் உள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் ஆக்கிரமித்துள்ளன. எனவே கடந்த சில ஆண்டுகளாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஏராளமான தொழில்களில் சோடா கம்பெனி தொழிலும் முக்கிய இடத்தில் உள்ளது. கோலி சோடா என்ற பெயரில் திரைப்படமும், நகைச்சுவை காட்சிகளும், திரைப்படப்பாடலும்கூட வந்துவிட்டன. சினிமா மூலமாக கோலி சோடா என்ற வார்த்தையை அறிந்த இளைய தலைமுறையினருக்கு அப்படி என்றால் என்ன? அது எப்படியிருக்கும் என தெரியாமல் போய்விடும் சூழல் உருவாகியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் குளிர்பானங்கள் நம் ஊரில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதால் அதில் கிடைக்கும் வருமானம் முழுவதும் வெளிநாடுகளுக்கே செல்கிறது. ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்கி குடித்தவுடனேயே பாட்டில்களை ஆங்காங்கே தூக்கி எறிந்துவிடுகிறோம். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
சோடா தொழிலை மேம்படுத்துவது மூலம் உள்ளூர் நபர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். கண்ணாடி பாட்டில்களை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் நம்மால் முடிந்தளவு தடுக்கலாம்.
இதுகுறித்து சோடா உற்பத்தியில் ஈடுபட்டுவரும் கூமாபட்டியைச் சேர்ந்த சண்முகம் பேசுகையில், ''எங்க அப்பா சுப்பிரமணியன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சோடா உற்பத்தி செய்துவந்தார். எங்கள் ஊரில் மட்டும் 3 சோடா கம்பெனிகள் இருந்தன. சோடா கம்பெனிகள் மட்டும் சுமார் 20 பேருக்கு வேலை கொடுத்தன. எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது. வியாபாரமும் நன்றாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டு குளிர்பானங்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சோடாவுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது. ரூ. 6க்கு கோலி சோடா கொடுக்கிறோம். ஆனால் இதை வாங்காமல் 10 ரூபாய் கொடுத்து பன்னாட்டு குளிர்பானங்களை மக்கள் வாங்கி குடிக்கின்றனர்.
இதனால் இரு சோடா கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன. அங்கே வேலை செய்தவர்கள் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். எங்கள் கம்பெனியில் 7 பேர் வேலை செய்தார்கள். தற்போது நான் மட்டும்தான் வேலை செய்கிறேன். நெடுங்குளம், கொடிக்குளம், கூமாபட்டி ஆகிய ஊர்களில் உள்ள கடைகளுக்கு மட்டுமே சோடா விற்பனை செய்கிறேன். ஒரு நாளைக்கு 100 பாட்டில்கள்கூட விற்பனையாவதில்லை. ரூ 250லிருந்து ரூ.300 வரை வருமானம் கிடைக்கும். அப்பாதான் முதலில் எங்கள் ஊரில் சோடா தயாரிக்கும் தொழிலை தொடங்கினார். அதனால் அதை அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
மேலும், கடை வைத்திருக்கும் முகமது தாகா கூறும்போது, ''முன்பு ஏதேனும் வயிற்று பிரச்னை இருந்தால் பொதுமக்கள் சோடாவைதான் தேடுவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது. வெளிநாட்டு குளிர்பானங்களையே அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கோலி சோடா விற்பனையாவதே கஷ்டம்தான். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் சர்பத் குடிப்பவர்கள் சோடா சர்பத்தையும் விரும்புகின்றனர். இதனால் வெயில் காலத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 25 கோலி சோடா வரை விற்பனையாகிறது. ஆனால் எல்லா நாட்களும் இப்படியே இருப்பதில்லை. மக்கள் கோலி சோடாவை விரும்பினால் நிச்சயம் இந்த தொழிலும் மீண்டும் புத்துயிர் பெறும்'' எனத் தெரிவித்தார்.
எவ்வளவுதான் குளிர்பானங்கள் வந்தாலும் கோலிசோடாவுக்கு என ஒரு மவுசு எப்போதும் உள்ளது. சோடா தயாரித்த சில மணி நேரங்களிலேயே விற்பனைக்கு வருவது கோலி சோடா மட்டுமே. இந்நிலையில் அரசும் கோலி சோடா உற்பத்தி செய்வதற்கான மூலபொருட்களுக்கு அதிகமான வரி விதித்துள்ளது கோலி சோடா தொழில் நலிவடைந்து வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பழைமையின் பெருமை பேசி வரும் நாம், கோலி சோடா தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் நம் ஊர்க்காரர் வைத்திருந்த கோலி சோடா உற்பத்தியை வெளிநாட்டினர் கையில் எடுப்பார்கள். போட்டிபோட்டுக் கொண்டு அதையும் நாம் வாங்கிப் பருகுவோம். ஏற்கெனவே இருக்கும் தொழில்களில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதித்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் நம் உள்ளூர் தொழிலை அழியாமல் பாதுகாப்போம்.