தீபாவளி பண்டிகை என்றதும் நினைவுக்கு வருவது புத்தம் புது ஆடைகள், தீபாவளி பலகாரம், பட்டாசு வெடித்து கொண்டாட்டம் ஆகும். அதிலும், தீபாவளியின் முதல் அடையாளமே பட்டாசுகள் என்றால் மிகையாகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையுடன் வெடித்து மகிழும் பட்டாசுகள், குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகாசியில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சிவகாசியில்1924 ஆம் ஆண்டு ஒரு தீப்பெட்டி ஆலையில் உற்பத்தையை தொடங்கிய இந்த பட்டாசுகள் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் உள்ள மக்களால் வெடிக்கப்படுகின்றது.
பட்டாசு உற்பத்திக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க பட்டாசுகளின் தேவையும் உற்பத்தியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால், பசுமை பட்டாசுகள் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல், தொழிலாளர்களின் பற்றாக்குறை போன்ற காரணங்கள் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியாளர்களிடையே மிகுந்த சவாலாக பார்க்கப்படுகிறது.
சிவகாசியில் பட்டாசுக்கடை நடத்திவரும் விவேக் குமரன் இதுகுறித்து கூறுகையில், 'பசுமை பட்டாசை சிவகாசி உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் முழுமையான அளவில் வரவேற்கிறோம். ஆனால், பசுமை பட்டாசின் விற்பனை 2020ஆம் ஆண்டில் தான் முழுமையான அளவில் எட்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கடந்தஆறு மாத காலமாக பட்டாசு உற்பத்தி என்பது பசுமை பட்டாசு சர்ச்சையினால் முற்றிலுமாக தடைப்பட்டுப் போனது.
இதன் காரணமாக நடப்பு ஆண்டு பட்டாசு விற்பனை விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் பட்டாசு விற்பனை 25 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது. பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் செலவு செய்த முதலீடு கூட திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி கூடுதல் நேரம் வெடிக்க அனுமதி வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.