பிட் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களின் மனதை செம்மைப்படுத்தும் விதமாக நேரு யுவகேந்திரா மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை, விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி கொறடாவுமான மாணிக்கம் தாக்கூர் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். பணபலத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கும் அதிமுக படுதோல்வி அடையும் என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற சீமான் கருத்துக்கு பதிலளித்த மாணிக்கம் தாக்கூர், தமிழ் தேசியம் பேசும் சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கும்போது எங்கே சென்றார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏழு தமிழர்களின் விடுதலைக்கு மிகப்பெரிய இடைஞ்சலை ஏற்படுத்தி தமிழ் இனத்துக்கு துரோகியாக சீமான் விளங்குவதாக விமர்சித்தார்.