விருதுநகர் : சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தில் உள்ள சக்கர வியூகம் கராத்தே, சிலம்பம் விளையாட்டு கலைக்கூடம் பயிற்சி பள்ளியில் கராத்தே, சிலம்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் மாஸ்டர் ஹரிஹர செல்வம் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்று தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11,12,13 ஆகிய தேதிகளில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நாடு முழுவதும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த குழுவினர் பங்குபெற்றனர்.
இதில் தமிழ்நாடு சார்பாக சாத்தூரில் உள்ள சக்கரவியூகம் கராத்தே, சிலம்பம் குழுவினர் பங்குபெற்று பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெற்றி பதக்கங்களை பெற்றனர்.
இதில் குறிப்பிடும்படியாக ஆறு தங்கம், ஆறு வெள்ளி, இரண்டு வெண்கலம் உள்பட 14 பதக்கங்களை பெற்று சிறந்த குழுவிற்கான சிறப்பு பரிசையும் வென்று வந்தனர்.
இவர்கள் சாத்தூர் ரயில் நிலையம் வந்து இறங்கியபோது அவர்களது பெற்றோர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். தமிழ்நாடு சார்பில் பல்வேறு பதக்கங்களை வென்று வந்த சிறுவர்கள் இப்பகுதிக்கு பெருமை சேர்ப்பதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பதக்கம் வென்ற ஆயுதப்படை காவல் துறையினர் - ஏடிஜிபி பாராட்டு!