விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துார் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். மதுரை, விருதுநகர் ஆகிய இரு மாவட்ட எல்லைக்குட்பட்டு தரைமட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற சுந்தரமகாலிங்கம் கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுவதாலும், நினைத்த காரியங்கள் நடப்பதாகவும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி சதுரகிரி கோயிலுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறு நாட்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.