விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்ன தம்பியாபுரத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமியும் (50), பாண்டியும் (40). அக்கா, தம்பி ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள தங்களது மூத்த சகோதரரைச் சந்திக்க பெத்துரெட்டிபட்டி விலக்கில் நான்குவழிச் சாலையின் ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ராமர் குடும்பத்தினர் குல தெய்வ வழிபாட்டுக்காக இருக்கன்குடி சென்று வழிபாடு முடித்துவிட்டு கன்னியாகுமரி நோக்கி வேனில் சென்றுக்கொண்டிருந்தனர். பெத்துரெட்டிபட்டி விலக்கில் நான்குவழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லட்சுமி, பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். வேனில் பயணம் செய்த ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் பேருந்து நிறுத்தமோ சாலைத் தடுப்புகளோ அமைக்கப்படாமல் இருந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.45 லட்சம் சுருட்டிய கும்பலின் தலைவி கைது!