விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக காலங்கரை அம்மன் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக விருதுநகர் மாவட்டம் உள்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இச்சூழலில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு காலங்கரை அம்மன் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அதனால் கழிவுகள் அடித்து வரப்பட்டு மடைகள் அடைத்துக்கொண்டன. தண்ணீர் வெறியேற முடியாமல், ஊர்களுக்குள் வரும் நிலைமை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பொக்கலைன் இயந்திரம் மூலம் பாலத்தில் இருந்த அடைப்பை காவல்துறையினர் சரி செய்தனர். பின்னர் வெள்ளப் பெருக்கை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து ரசித்துச் சென்றனர்.