மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபூபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், 'ராஜபாளையம் அருகே உள்ள பஞ்சம்பட்டி கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் நியாவிலைக் கடை இல்லாததால், இங்குள்ள மக்கள், அருகில் உள்ள புணல்வெளி மற்றும் ஜமீன் நல்லமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொருட்களை வாங்குகின்றனர்.
இதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்வதால் இரு வேறு சமூகத்தினரிடையே மோதல் உருவாகும் நிலையும் உள்ளது.
இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பட்டவில்லை. எனவே, பஞ்சம்பட்டி கிராமதிற்கு தனி நியாயவிலைக் கடையை உருவாக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அந்த கிராமத்தில், 90 குடும்ப அட்டைகள் மட்டுமே உள்ளன. சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நியாவிலைக் கடை அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், அந்த கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வசித்துவருகின்றனர். எத்தனை குடும்ப அட்டைகள் உள்ளன என்பது குறித்து விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் குடும்ப அட்டைகள் இருந்தால் மட்டுமே அப்பகுதியில் நியாயக் விலை கடை திறக்க முடியும்.
எனவே மனுதாரர் கிராமத்தில் அதிகப்படியான குடும்ப அட்டைகள் இருந்தால், புதிய மனுவினைத் தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஓடையில் காப்பர் கழிவுகளை கொட்டியவர்கள் யார்? - நீதிபதிகள் கேள்வி