இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பாஜக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத கட்சி. பாசிச கொள்கையின் மூலம் சர்வாதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது. அதிகார பலத்தில் இருக்கும் பாஜக தொடர்ச்சியாக ஜனநாயக படுகொலைகளை அப்பட்டமாக செய்து வருகிறது.
தங்கள் கட்சி, ஆட்சி நடத்த முடியாத மாநிலங்களில் பிற கட்சிகள் ஆட்சி நடத்தினால், அந்த ஆட்சியை சதி செய்து கலைத்து வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பிற கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க இருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுப்படுத்தி இரவோடு இரவாக பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து ஜனநாயக படுகொலை செய்துள்ளது.
இதுபோன்று ஜனநாய படுகொலைகள் தொடர்ந்து நடப்பது நமது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல. பாஜக சரிந்து கொண்டிருப்பதை மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் சரியான சவுக்கடி. இதேபோன்று பாஜகவின் சர்வாதிகார போக்குக்கு நாட்டு மக்கள் உரிய தண்டனையை உரிய நேரத்தில் வழங்குவார்கள்.
தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கும் நிலையில் இதற்கு தீர்வு காணும் அரசாக தமிழ்நாடு அரசு இல்லை. எடப்பாடி அரசு குடிதண்ணீர் குறித்தோ, பால் குறித்தோ, பொது மக்கள் பிரச்னைகள் குறித்தோ கவலைப்படாமல் உள்ளது. இவ்வாறு கூறினார்.