விருதுநகர் அருகே காரியாபட்டி செல்லும் சாலையில் நந்திகுண்டு கிராமத்தில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் 200 ஏக்கர் புஞ்சை நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு முன்பாக உள்ள 40 ஏக்கர் நிலத்தில்தான் விவசாய நிலங்களுக்கு பாதை உள்ளது. காரியாபட்டி மேலதுளுக்கன்குளம், கீழதுளுக்கன்குளம், நந்திகுண்டு ஊராட்சி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த 40 ஏக்கர் நிலம் வழியாக நீர்வரத்து கால்வாய்க்கு செல்கிறது.
200 ஏக்கர் விவசாய நிலத்துக்கும் நீர் ஆதாரமாக இந்த நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்நிலையில், பாதை அமைந்துள்ள 40 ஏக்கர் நிலத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சோலார் மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதற்காக ஆறு ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதனிடையே, நீர் வழித் தடத்தில் அமையவிருக்கும் சோலார் மின் நிலையம் நீர் வழிப்பாதையை மறைக்குமாறு அமைந்துள்ளது, எனவே இந்த சோலார் மின் நிலையத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறிய 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், டிராக்டரை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காரியாபட்டி தாசில்தார் தனகுமார், அருப்புக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், அரசு அலுவலர்கள் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த தாசில்தார், ராட்சத குழாய்களை அகற்ற உத்தரவிட்டார்.