தீபாவளி பண்டிகை என்றதும் நினைவுக்கு வருவது புத்தம்புது ஆடைகளும் பட்டாசுகளும்தான். தீபாவளியின் அடையாளமே பட்டாசுகள் என்றால் அது மிகையாகாது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையுடன் வெடித்து மகிழும் பட்டாசுகளை, இந்தியாவிலேயே அதிகளவில் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள ஆயரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனா். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் உள்ள ஆலைகளில் பட்டாசு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
மேலும், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு முதல் டிக் டாக் வரை பல்வேறு விதமான புதிய பட்டாசுகள் சந்தையில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக குழந்தைகளை அதிகம் கவரும் வகையில் நிறைய பட்டாசு வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதில், தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியைக் குறிப்பிடும் பட்டாசானது சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோனில் விளையாடும் விளையாட்டுகளான டெம்ப்ல் ரன் (Temple run), கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் (clash of clans), ஆங்கிரி பேர்ட் (Angry Bird) போன்ற வீடியோ கேம்களிலான பட்டாசுகளும் சந்தைக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல சமூக வலைதளங்களான ட்விட்டர், ஸ்கைப் ஆகிய பெயர்களிலும் பாகுபலி, வொன்டர் பார்க் (Wonder park), டார்சன் (Tarzan), கார்ஸ் (cars) போன்ற பல்வேறு திரைப்படங்களின் பெயர்களிலும் என ஏராளமான புதிய ரக பட்டாசுகள் சந்தையில் களமிறங்கியுள்ளன.
மேலும் கலர்ஸ் ரேயின் (COLORS RAIN), மேஜிக் பீக்காக் (MAGIC PEACOCK), மேக்ஸ் (MAX100 FLAME), கன் ட்ரை கலர் ஃபௌன்டேன் (GUN - TRI COLOUR FOUNTAIN), சிங்பாப் (SINGPOP), ஐ ஃபாக்ஸ் ஸ்டார் (IFOX STAR) குறிப்பிடத்தகுந்த பட்டாசுகளும் வலம்வரவுள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக 75 நொடிகள் வெடிக்கக்கூடிய பிக்கஸ்டு இந்தியன் ஃபௌன்டேன் (BIGGEST INDIAN FOUNTAIN) என்ற தரையில் வெடிக்கக்கூடிய புதிய வகை பட்டாசும் பட்டாசு ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.
இது குறித்து பட்டாசு கடை உரிமையாளர் குமார் கூறுகையில், “இந்தாண்டு கடந்த ஆண்டை விட மூன்று முதல் ஐந்து சதவீத அளவு விலை உயர்விருக்கும். விலைவாசி உயர்வின் காரணமாகவும் பசுமை பட்டாசு சட்டத்திருத்தம் காரணமாகவும் இந்தாண்டில் நீண்ட நாட்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் பட்டாசு விற்பனை குறைவாக உள்ளது” என்றார்.
திருச்சியிலிருந்து பட்டாசுகளை வாங்குவதற்காக சிவகாசி வந்திருந்த மாணிக்கவாசகம் பேசுகையில், “ஆண்டுதோறும் சிவகாசியில் வந்து பட்டாசு வாங்குவது என்பது தீபாவளியை வரவேற்பது போன்றதாகும். மேலும் தங்களளை சார்ந்த உறவினர்கள், நட்பு வட்டாரங்கள் அனைவருக்கும் இங்கிருந்து வாங்கிச் செல்லும் பட்டாசுகளை பரிசாக வழங்குவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்தாண்டு பட்டாசுகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதிக அளவில் புதிய ரக பட்டாசுகள் வந்துள்ளதால், மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடியதாக உள்ளது” என மகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் படிக்க: தொடர் மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு