'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக திமுக எம்பி கனிமொழி சிவசாசியில் அச்சுத் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடு முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1 கோடி பேர் பட்டாசு தொழில் நலிவடைந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசாங்கமோ அதற்கு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. மத்திய அரசிடமும் பேசவில்லை. இதுவரை, திமுகவே பட்டாசு தொழிலாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
தேர்தல் வரும் நிலையில் இப்பிரச்னையை இன்றைக்கு திமுக கையில் எடுக்கவில்லை. சீன பட்டாசு இறக்குமதி குறித்து நானே நேரடியாக மத்திய அமைச்சரை சந்தித்துப் பேசினேன். அதுபோல் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, பட்டாசு தொழிலாளர்களுக்காக அவையில் குரல் கொடுத்திருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக இப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணப்படும்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. புதிதாக தொழில் முதலீட்டுகளை ஈர்க்காத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டும் முதலமைச்சராக மட்டுமே இருக்கிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆகையால், மு.க.அழகிரி கட்சி தொடங்கினாலும் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் பறிக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க: சேலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு!