விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் ரூ. 444.71 கோடி மதிப்பிலான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியிலிருந்து தாமிரபரணி ஆற்றின் மூலம் சில்லாங்குளம் என்னுமிடத்தில் ஜம்பிங் பம்ப் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் இங்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
பின்பு சாத்தூர் நகராட்சிக்கு 30 லட்சம் லிட்டர், விருதுநகர் நகராட்சிக்கு 60 லட்சம் லிட்டர், அருப்புக்கோட்டை நகராட்சிக்கு 1.25 லட்சம் லிட்டர், என குடிநீர் பிரித்து அனுப்பப்படும்.
மக்களின் குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 2024 ஆம் ஆண்டிற்குள் விரைவுபடுத்தப்படும்.மேலும் அனைத்து விதமான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.