தமிழ்நாட்டில், தலைக்கவசம் அணியாததால் விபத்துகளில் அதிகமானோர் உயிரிழப்பதை தொடர்ந்து உயர் நீதிமன்றம் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தமிழ்நாடுஅரசு, தனியார் அமைப்புகள் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், மழைநீர் சேகரிப்பு குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் மம்சை மாரத்தான் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக தலைக்கவசம், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து இளைஞர்களுக்கான 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நடந்தது. மாணவர்களுக்கான 7கிலோ மீட்டர் தூரம் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும், இந்த மாரத்தான் போட்டியில் 83வயதான முதியவர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு ஈடாக போட்டி போட்டு ஓடினார். இதனைக் கண்ட பொதுமக்களும், மாணவர்களும் முதியவரை பாராட்டி, உற்சாகப்படுத்தினர். இளைஞர்கள் சிலர், சிறிது தூரம் நடப்பதற்கே சிரமம்பட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் இக்காலத்தில், முதியவரின் இந்த அதிரடியான ஓட்டம் இளைஞர்களுக்கு பெரும் வியப்பையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு கோப்பையும் வழங்கி பாராட்டப்பட்டது.
இதையும் படிங்க : மாராத்தான் ஓட்டத்தில் சிறுவர்கள் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு!