கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர், மெயின் பஜாரில் சில்லறை வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு, வியாபாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மெயின் பஜார் அல்லது புதிய பேருந்து நிலையத்தில் சில்லறை வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என காய்கறி சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, மெயின் பஜார் சில்லறை வியாபாரிகள் இணைந்து, விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், புதிய பேருந்து நிலையம் அல்லது மெயின் பஜாரில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும், சில்லறை வியாபாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.