இருபது ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதற்கு தூய்மைப் பணியாளர் காலனி எனப் பெயரிடப்பட்டது.
உரிய ஆவணங்கள் இல்லாத அவலம்
பல ஆண்டுகள் ஆன நிலையிலும் சேத்தூர் பேரூராட்சி நிர்வாகம் அந்தக் காலனியில் வசிப்பவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சிதிலமைடைந்த மேற்கூரை, விரிசல் கண்ட சுற்றுச்சுவர், சாலை வசதியில்லை, கேள்விக்குறியான சுகாதாரம் உள்பட இவர்கள் வசிக்கும் இடம் பாழடைந்து காணப்படுகிறது.
இங்கிருக்கும் குழந்தைகள் சாதி சான்றிதழ் கூட வாங்க முடியாமல் தவித்துவருகின்றனர். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு முகவரி ஏதும் இல்லாததால் ரேசன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெறமுடியவில்லை.
காரணம் மிகவும் எளிது, ஆனால் அவர்கள் அனுபவிக்கும் துயரம் மிகவும் கொடிது. மாவட்ட நிர்வாகமோ, பேரூராட்சி நிர்வாகமோ இவர்கள் குறித்து அக்கறைப்படவில்லை. பராமரிப்பு இல்லாத வீடுகளில், பச்சிளங்குழந்தைகளுடன் ஆபத்தான சூழலில் தூய்மைப் பணியாளர்கள் வசித்துவருகின்றனர்.
அரசு நடவடிக்கை தேவை
தங்களுக்கு உரிய ஆவணங்களும், வீட்டு பட்டாவுடம் கிடைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர். தற்போதைய தமிழ்நாடு அரசு சேத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தக் காலனியை இடிக்க போவதாகத் தெரிவிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தங்களுக்கு வேறு இடத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
கரோனா காலங்களில் முதல் நிலை தூய்மை பணியாளர்கள் என அனைவராலும் போற்றப்பட்ட தூய்மை பணியாளர்களின் மறுபக்கம் இத்தகைய வேதனையை அடைய அரசின் அலட்சியமும் காரணம். நிலைமையை சரி செய்ய அரசு முன்வர வேண்டும்.
இதையும் படிங்க: பாதை இல்லாமல் இறந்தவர் உடலை வயல் வழியே தூக்கிச்செல்லும் அவலம் - அலட்சியம்காட்டும் அரசு