விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக ஆள் நடமாட்டமில்லாத சரணாலயப் பகுதிக்குள் நுழையும் சமூக விரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர் கதையாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 28) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நகர் காவல் நிலைய ஆய்வாளர் கருத்தப்பாண்டி மற்றும் குழுவினர் சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தில் வந்த நபரை விசாரணை செய்ததில் 50 கிலோ மான் கறி இருந்தது தெரியவந்தது.
பின்னர், மான் கறியை பறிமுதல் செய்த காவல் துறையினர், காளிராஜ் என்பவரை கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், காளிராஜ் மற்றும் மேலும் இருவர் சேர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான குன்னூர் பீட் பகுதியில் இரண்டு மான்கள் மற்றும் ஒரு பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 7 நாட்டு வெடிகுண்டு மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றிய வனத்துறையினர் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.