விருதுநகர்: பஞ்சு சந்தைப் பகுதியில் கனரக வாகனத்தில் வைத்து சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தால் லாரி எரிந்து சேதமடைந்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கனரக வாகனம் ஒன்று, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கொண்டுசென்ற சுமையை இறக்கிவிட்டு, பஞ்சு சந்தை அமைந்திருக்கும் பகுதியின் அருகே நிறுத்தியுள்ளனர்.
அந்நேரத்தில், ஓட்டுநரும், உதவியாளரும் சமையல் செய்தபோது திடீரென சிறிய எரிவாயு உருளை வெடித்ததில், வாகனத்தில் உட்பகுதியில் இருந்த தார்ப்பாய், கழிவு பஞ்சுகளில் தீப்பிடித்ததில் வாகம் பெரும் சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.