விருதுநகர்: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் குளிர்கால கூட்டத் தொடரில் பூஜ்ஜிய நேரத்தின் போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து திடீரென இரண்டு இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்தனர். இதனையடுத்து சுதாரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றினர். பின்னர் பாதுகாவலர்கள் அந்த இளைஞர்களை பிடித்து வெளியேற்றினர்.
இந்த சம்பவம் குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இன்றைய தினம் மக்களவையில் நடந்த தாக்குதல் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம், கவலைக்குரிய விஷயம். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது. புதிய நாடாளுமன்றம் கட்டிய பின்பு நவீனமாக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றெல்லாம் வாய் பேசினார்கள்.
ஆனால் இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கத்தில் இருந்து இருவர் எகிறி குதித்து வந்ததும், மேலும் அவர்கள் கையிலிருந்து புகையோடு வீசியது பார்க்கும் போது அதிர்ந்தோம். இந்த சம்பவத்திற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தப்பித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபர்களை சாதுர்யமாக பிடித்தார்கள். நாடாளுமன்ற தாக்குதல் நடந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில் மீண்டும் பாஜக அரசில் நாடாளுமன்றத்திலேயே தாக்குதல் நடந்திருப்பது வெட்கக்கேடானது, அதிர்ச்சியளிக்கிறது" என கூறியுள்ளார்
இதையும் படிங்க: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டிசம்பர் 13 2001-இல் நடந்தது என்ன? - முழு விவரம்!