விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரது மகள் அரசி என்பவருக்கும் நெல்லையைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
100 பவுன் நகை, வைர மோதிரம், 2 கிலோ வெள்ளி!
மணமகன் வீட்டார் வற்புறுத்தலின்பேரில் சீதனமாக 100 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பாத்திரங்கள், மணமகனுக்கு வைர மோதிரம், மீண்டும் தணியாக 5 பவுன் நகையும் தனியாக கொடுக்கப்பபடுள்ளது.
திருமணம் ஆன மூன்று மாதத்தில் பெண் வீட்டார் சீர்வரிசை சரிவர கொடுக்கவில்லை என்று அரசியை அவரது மாமியார், மாமனார் துன்புறுத்தியதாக பெண் வீட்டார் தரப்பில் கூறப்படுகிறது.
ஆண் குழந்தை வேண்டும்
அரசி, அவரது கணவர் வினோத் இருவரும் அமெரிக்காவில் வசித்துவந்த நிலையில் இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இருந்தாலும் வினோத் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கூறி தொடர்ந்து மனைவியை சிகிச்சை எடுக்க வேண்டும் என்று துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அரசியோ இதற்கு சம்மதம் தெரிவிக்காமல மறுப்பு தெரிவித்துவந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வினோத் அரசியுடன் வாழ மறுத்து அவரை அவரது தாய் வீட்டிற்குத் துரத்தியுள்ளார். இது குறித்து அரசி வீட்டார் சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
3 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவன் வினோத், அவரது பெற்றோர் கனகசபாபதி, சுப்பம்மாள் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய அலுவலர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவன் உட்பட 4 பேருக்கு 10 வருட சிறை தண்டனை!