சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லாது என் உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் உரிமைகள் பாதிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு சண்டிகர் யூனியன் பிரதேச மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கு ஒன்றில் வசிப்பிடத்தின் அடிப்படையில் மாநில அரசு மேற்கொள்ளும் மருத்துவ மாணவர்களின் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனை மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடுகள் செல்லும் எனவும், மற்ற ஒதுக்கீடுகளும் குறிப்பாக மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அல்லது பிறந்தவர்களுக்கு என்று குறிப்பிட்ட எந்த ஒதுக்கீடும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அல்லது தமிழ்நாட்டில் பிறந்த மாணவர்களுக்காக 50 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில ஒதுக்கீடு சமூகநீதியை உறுதி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தில் உள் ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும்.
1200 இடங்கள் பறிபோகும்: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக்கட்டமைப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக எம்டி, எம்எஸ், டிப்ளமோ போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புகளில் 2,294 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் 1207 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 1087 பேர் ஆண்டு தோறும் பயன்பெற்று வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் 1200க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாய நிலை உருவாகியிருக்கிறது. இந்த இடங்களில் இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு மாணவரும் சேரலாம் என்றால், தமிழ்நாடு உட்பட அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும்.
இந்த ஆண்டு பாதிப்பில்லை: ஏற்கெனவே 50 சதவீதம் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இதர மாணவர்கள் தமிழ்நாட்டில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டிற்கான மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 3ஆம் சுற்று நடைபெற உள்ளது.
இந்தநிலையில் ஏராளமான மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேர்ந்து தங்கள் படிப்பை தொடங்கி விட்டனர். எனவே இப்போதைய தீர்ப்பினால் இந்த ஆண்டுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தலோடு, மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் உரிமை: தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவம் பட்டப்படிப்புகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டில் மூலமே நிரப்பப்படுகிறது. முதுகலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் வரை அகில இந்திய ஒதுக்கீடு தரப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் சார்பில் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கான 50 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பறித்து 100 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு என்று மாற்றப்பட்டது.
உடனடியாக தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சனை கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. Super speciality -ல் படிக்கும் மருத்துவ இளங்கலை, முதுகலை பட்ட மேற்படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்பட்டது. 2020ல் வந்த அந்த ஆணைக்குப் பிறகு 2022இல் அரசுப் பணியில் இருக்கின்ற மருத்துவர்களின் உரிமையும் உறுதி செய்யப்பட்டது.
சீராய்வு மனு தாக்கல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மாநில அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தனியார் கல்லூரிகளில் உள்ள 50 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கும் பாதிப்புகள் ஏற்படும். தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் கூட வசிப்பிட அடிப்படையில் இடங்கள் கொடுப்பதில் பாதிப்புகள் ஏற்படும்.
முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்பினை பொறுத்தவரை மாநில அரசின் மூலம் முதுகலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவ பட்டமேற்படிப்பில் மாநில அரசின் இட ஒதுக்கீடு உரிமையை ஒன்றிய அரசிற்கு தாரை வார்க்கும் இந்த தீர்ப்பு என்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். முதலமைச்சர் ஆலோசனைகளைப் பெற்று மிக விரைவில் இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்," என்றார்.