சென்னை: சென்னை மாநகராட்சியின் இந்தாண்டு முதல் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் பெறுவது மற்றும் அதற்கு மைக்ரோசிப் பொருத்துவதை கட்டாயமாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் விவரம் வருமாறு:
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்தும் வகையில் அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இணைய வழியாக உரிமம் பெற ரூ.50 கட்டணம் செலுத்தி ஒவ்வொரு ஆண்டும் புதிய உரிமம் மற்றும் உரிமம் புதுப்பிப்பிக்கப்பட்டு வருகிறது.
தெரு நாய்கள் கணக்கீட்டு
சென்னையில் இதுவரை 9 ஆயிரத்து 151 செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கு இணைய வழியில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 157 தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
மைக்ரோசிப்பிங் கட்டாயம்
எனினும் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் எண்ணிக்கை குறித்த முழுமையான விவரங்கள் அறியப்படவில்லை. அதேசமயம், வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனை கண்காணிக்க செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதையும், அவற்றின் உடலில் மைக்ரோசிப் பொருத்துவதையும் கட்டாயமாக்கி, உரிமையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 6 கால்நடை மருத்துவமனைகள், கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிகிச்சைக்காக கொண்டு வரப்படும் செல்ல பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் உரிமம் பெறுவது மற்றும் மைக்ரோசிப் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இத்தீர்மானத்தில், செல்லப் பிராணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் உரிமையாளர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய பிரத்யேக இணையவழி மென்பொருள் (Online Software) மற்றும் செயலி (App) உருவாக்கப்படும்.
பிரத்யேக இணையவழி மென்பொருள் மற்றும் செயலியை வெளி நிறுவனம் மூலமாக உருவாக்க வரையறுக்கப்பட்ட குறுகியகால ஒப்பந்தம் (Limited Short ETender) கோரப்படும்.
செல்லப் பிராணிகள் உரிமம் பெறுவதற்காக தற்போது உள்ள இணையதளத்தோடு, புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள இணையவழி மென்பொருள் மற்றும் செயலியையும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.