விருதுநகரில் கோவிந்தராஜ் (54) என்பவர் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா(50) நந்தி ரெட்டியாபட்டி பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் காலை வேலைக்குச் சென்றால் மாலை தான் வீடு திரும்புவது வழக்கம். அதேபோல் இன்று காலை வேலைக்குச் சென்றுவிட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு பதட்டமடைந்த அவர், உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவும் திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் வைத்திருந்த 38 சவரன் நகை மற்றும் 83,000 ரொக்கம் ஆகியவை காணாமல் போனதை அறிந்த மஞ்சுளா, விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஊரக காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களைச் சேகரித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.