விருதுநகர்: சாத்தூரை அடுத்துள்ள வெம்பக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக கடந்த ஆண்டு முதலாம் கட்ட அகழாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், 3 ஆயிரத்து 254 தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஏப்ரம் 6ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 16 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்குழிகளில் சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான், பெரிய தட்டு, தக்களி, பானை, தோசைக்கல், சங்கு வளையல்கள், பாசிமணிகள் ஆகியவற்றுடன் இலை வடிவிலான அச்சு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேலான தொல்லியல் பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து அகழாய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 56 மில்லி கிராம் அளவிலான தங்கத்தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 40 விழுக்காடு அளவிற்கு தங்கம் சேர்க்கப்பட்டு இந்த ஆபரணத் தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், "நமது முன்னோர்கள் தங்கத்தாலான தாலியைப் பயன்படுத்தியுள்ளதாகவும், இன்னும் பல்வேறு வகையில் தங்கத்தினாலான பொருட்கள் பலவற்றைப் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது" என்றனர்.
சுடுமண்ணாலான புகைபிடிப்பான், தோசைக்கல் ஆகியவற்றை அடுத்து வெம்பக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தங்கத்தாலியும் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெம்பக்கோட்டையில் நடக்கும் அகழாய்வு பணியின்போது பல்வேறு அரிய பொருட்கள் கண்டெடுக்கப்படுவது தொல்லியல் ஆர்வலர்கள் இடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 'மாமன்னன் எனக்குள் 30 ஆண்டுகள் இருந்த ஆதங்கம்' - ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!