விருதுநகர் : விருதுநகர் அருகே திருச்சுழி, கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி, வெம்பக்கோட்டை துலுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல். இருவரும் அரசுப்பள்ளி மாணவர்கள். இருவரது பெற்றோரும் கூலித்தொழிலாளிகள். மாணவர்கள் இருவரும் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து, அருண்பாண்டி 190, இமானுவேல் 165 மதிப்பெண் பெற்றிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின்படி, மருத்துவக் கல்வி பயில கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்தனர். கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே காலியிடம் இருந்ததால், குடும்ப வறுமை காரணமாக கல்வி கட்டணம் செலுத்த இயலாது என தனியார் கல்லூரியைத் தேர்வு செய்யாமல் திரும்பினர்.
இரண்டாம் நாள் கலந்தாய்வின்போது, தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தங்களுக்கு மீண்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என மாணவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் கடும் கடல் சீற்றம்!