ஜாஜ்பூர் (ஒடிசா): ஒடிசாவின் ஜாய்பூர் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பத்ரக்-கபிலாஸ் சாலை ரயில்வே பிரிவில் உள்ள கோரை நிலையத்தில் இன்று (நவ.21) அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டதில் இரண்டு பேர் இறந்தனர். காலை 6.45 மணியளவில் ரயிலுக்காக பயணிகள் ஓய்வறையில் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்கு ரயிலின் பல பெட்டிகள் பத்ரக்-கபிலாஸ் சாலை ரயில் பிரிவில் தடம் புரண்டதால், ரயில் நடைமேடை மற்றும் நிலைய கட்டிடத்தின் மீது மோதியது. விபத்தைத் தொடர்ந்து இரண்டு ரயில் தடங்களும் தடைபட்டுள்ளன. மேலும் ரயில் நிலைய கட்டடமும் சேதமடைந்துள்ளது.
தடம்புரண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து காரணமாக இரண்டு ரயில் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலையில் பெரும் விபத்து; 48 வாகனங்கள் சேதம்