விருதுநகர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் அவரது திரு உருவசிலைக்கு முன்னாள் அமைச்சர் மாஃபாபாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்ஜிஆர் பிறந்த நாளில் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடன் வந்து எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். தொண்டர்கள் எழுச்சியை பார்க்கும்போது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியாக இருக்கிறேன்.
ஊழல்
பொங்கல் பரிசு வழங்குவதில் திமுக அரசு மிகப் பெரிய சொதப்பல் செய்துள்ளது. பொங்கல் பரிசு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது எதுவும் வழங்காதது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் திமுக வெற்றி பெறாது.
விவசாயிகள் மீது தடியடி
ஜல்லிக்கட்டில் தடுப்புகள் கூட முறையாக வைக்கவில்லை. விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுவது மிகப்பெரிய கொடுமை. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றியது அதிமுக அரசு ஆனால் இந்த நிகழ்ச்சி சரியாக நடக்கக்கூடாது. இளைஞர்கள் உயிர் பறி போகவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.
ஈவு இரக்கமற்ற செயல்
எந்தவொரு அரசாங்கமும் விவசாயிகள் மீது தடியடி நடத்த கூடாது. முறையான அறிவிப்புகள் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு போடாமல் விவசாயிகளை அடித்து விரட்டுவது ஈவு இரக்கமற்ற செயல். சென்ற முறை அதிமுக அரசு சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்தியது. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அப்போது ஓபிஎஸ் முதலமைச்சராக இருக்கும்போது தான். அதனால் பழிவாங்கும் நோக்கத்தோடு இவ்வாறு நடக்கிறதோ? என எண்ணத் தோன்றுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு முறையாக நடத்தப்பட வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே இது தமிழ்நாடு அரசின் காழ்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளது. இதற்கு மேல் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கார்த்தி சிதம்பரத்தின் கருத்து சமநிலையோடு இருக்கிறது. உச்சநீதிமன்றம் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அதை நான் வரவேற்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தல்: காவலரைத் தாக்கிய மாநகராட்சி அலுவலர்