விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பட்டாசு வெடிமருந்தில் உராய்வு ஏற்பட்டு கோர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலே 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 36 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வெடிமருந்து உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரை மட்டமாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண் என்பது தெரியவந்துள்ளது. தீயை அனைத்து மீட்பு பணியில் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தற்போது வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் 8 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள் ஆவார்கள். ஒருவர் அடையாளம் தெரியவில்லை.
பிரதமர் இரங்கல்
சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பயங்கர வெடி விபத்து- ஐந்து தொழிலாளர்கள் உயிரிழப்பு!