விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் அருகேயுள்ள கோட்டநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ஆர்.எஸ்.டி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பட்டாசுக்கான மருந்து கலவை தயாரிக்கும்போது எதிர்பாராவிதமாக தீப்பொறி எழுந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்தப் பட்டாசு ஆலையில் மொத்தம் 18 அறைகள் உள்ளன. கலவை தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஓர் அறை மட்டும் சேதமானது.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்ற அறைகளுக்குப் பரவாமல் தீயை அணைத்தனர். விபத்து குறித்து, உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்பாராவிதமாக நடைபெற்ற இந்த வெடி விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.