சிவகாசி அய்யனார் காலனியில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கேப் வெடி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுவர்கள் வெடித்து மகிழும் கேப் ரோல் வெடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில், பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாண்டியராஜன், ஜெயமுத்து ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
மேலும், அவர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பட்டாசு தயாரிப்பு அறை இடிந்து தரைமட்டமானது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அடுத்தடுத்து தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கிய இருவரும் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.