விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மீன் வியாபாரி ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவில்லிபுத்தூரில் 15-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் உள்ளன. அதில் சிலவற்றில், அரசு அனுமதித்த நேரத்தைவிட அதிகப்படியான நேரம் மது விற்கப்படுகிறது.
அதன்படி இன்று காலை வன்னியம்பட்டி விளக்கு அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். காவல் துறையினரைக் கண்ட செல்வராஜ், சிறிது இடைவெளியில் வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று தான் விஷமருந்திவிட்டதாகக் கூச்சலிட்டுள்ளார்.
அதனைப் பார்த்த வழக்குரைஞர்கள், காவல் துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், மது அருந்திய காரணத்தைக் கேட்ட வழக்குரைஞர்களிடம் செல்வராஜ், திருவில்லிபுத்தூர் பகுதியில் 24 மணி நேரமும் முறைகேடாக டாஸ்மாக், தனியார் பார்களில் மது விற்கப்படுகிறது.
அதனைக் காவல் துறை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதை வாங்கி குடித்த தன்னை மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகக் கூறி அடிக்கடி வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். அதனால் தான் விஷமருந்தியதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் இருவருக்கு சிறை!