விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் தமிழ்நாடு அரசு வழங்கிய காப்பீட்டுத் தொகையை சரிவர முறையாக வழங்காததால் விவசாயத் துறை, புள்ளியியல் துறையைக் கண்டித்து வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு முறையான பயிர்க் காப்பீடு வழங்க ஒப்புதல் அளித்து ஆணையிட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்திற்கு தங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த விவசாயிகளுக்கு பேரிடியாக பயிர்க் காப்பீட்டு அளவீட்டை விவசாயத் துறையும் புள்ளியியல் துறையும் மாற்றி அறிவித்தது.
பயிர்க் காப்பீட்டு முறையை கணக்கீடு செய்ததில் விவசாயத் துறை அலுவலர்களால் பெரும் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு (2019) ஏற்பட்ட வறட்சியாலும் படைப்புழு தாக்குதலாலும் மக்காச்சோளப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. அப்படியிருந்தும் இவ்வாறு இழப்பீடு முறையை அறிவித்தது விவசாயிகளைப் பெரிதும் பாதிப்படையச் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தப் புள்ளியியல் துறை குறிப்பிட்டுள்ள காப்பீட்டு முறையினை மறுபரிசீலனை செய்து தமிழ்நாடு அரசு முறையான காப்பீட்டை விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வோம்..!